நிழல்--சிறு கதை- 4

சிறு கதை 4

நிழல் 

 அந்த பிப்ரவரி மத இளம் வெயிலில் தான் இவனை நான் முதலில் பார்த்தேன்.இவனைப் பார்த்த நிமிடம் என் உள்ளத்தில் அன்பு  ஊற்றெடுத்தது. துரு துரு என்று அழகான கண்களும் அலைபாய்ந்து என்னைப் பார்த்த பார்வையில் அவனுக்கும் என் மீது அன்பு பாசம், காதல் என்ன வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். அன்று ஆரம்பித்த உறவு. ஹ்ம்ம்ம். என்ன சொல்வது. அவன் என் வீட்டின் ஒரு அங்கமானான்.

கல்லூரி ஹாஸ்டலில் இருந்து போனில் பேசிய என் மகனிடம் இவனைப் பற்றிய விவரங்களை சொன்னனேன். அவனோ, உன்னால் முடியுமா என்று பார்த்து கொள், நல்ல முடிவுதான் அம்மா, இது உன்னுடைய வாழ்க்கை, ஹாப்பி பார் யூ, நான் இந்த வீகெண்ட் சென்னை வரேன், நானும் மீட் பண்ணறேன் என்றேன்'. சின்னவன் என்னைவிடச்  சந்தோஷமானான். ஒரு ஆண்மகன் துணை என்றால் நல்லதுதானே' என்றான்.என்  அலுவலக வேலை  நேரம் தவிர நானும்  அவனும் ஒரே குஷிதான். அக்கம்பக்கத்தார்  எல்லாம் முணுமுணுக்க  ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தவர் சந்தோஷத்தில் மற்றவருக்கு வருத்தம்தான் பெரும்பாலும், எல்லோரும் நான் இல்லையே.
எங்கள் இருவரின் பந்தம் மிக நெருங்கியதாயிற்று. விடியற்காலையில் இருந்து உறங்கும் வரை. சுவாதீனமாக படுக்கையில் என் மேல் கால் போட்டுக்கொண்டு தூங்குவான். 

அவனுக்கும் எனக்கும்  பிடித்தது இந்த காலை நேரம்தான். அதிகாலை மேல் தீராத காதல் எனக்கு மட்டும்தான் என்று நான் நினைப்பேன், அவனிடம் சொன்னதற்கு நன்றாக ஆமோதித்தான்.இந்த அதிகாலை வேளை ஒரு இனிய மர்மம், நானும் அவனும் என்றும் இந்த மர்மத்தை ரசிப்பதை விடுவதே இல்லை.

சுமார் 5.30 மணிக்கு டீ ஷர்ட், ட்ராக் பாண்ட் வாக்கிங் ஷூஸ் அணிந்து கொண்டு நானும், எதைப்  பற்றியுமே கவலை இல்லாமல் அவனும் செல்லும் அந்த நாட்கள்.........சில அனுபவங்கள் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது. 

 விடியலை மணந்த  சந்தோசத்தில் கீழ்வானம், புது மணப்பெண் போல கொஞ்சம் கொஞ்சமாகச்  சிவந்ததது. நானும், ஒவ்வொரு  நாளும் நினைப்பேன்  விடியும் இந்த கணத்தைப் பார்க்க வேண்டும் என்று அந்த மர்ம கணம் தெரிவதேயில்லை தான். நடையும் தொடர்கிறது.அடையாறு காந்தி நகரின் இரண்டாவது கிராஸ்ஸில் மெதுவாகத்  துவங்கி நாலாவது கிராஸ்ஸில், பால வித்யா மந்திர் பள்ளியருகில் வலது பக்கம் திரும்பும் போது நடையின் வேகம் கூட ஆரம்பித்திருக்கும்.
என்னை பார்த்து ஸ்னேகமாக சிரிக்கும் பலர் அவனை ஒரு மரியாதையுடன் பார்ப்பார்கள். மேலும் சிலர் நேரடியாக என்னைக் கேட்டும் இருக்கிறார்கள், இந்த வயதில் எப்படி இப்படி என்று, நானும் சிரித்து மழுப்பி விடுவேன்.அவன் வயதுக்காரர்களோ  ஓடி வந்து அவனிடம் பேசிக்கொண்டே வருவார்கள். மேலும் சிலர் அவனை முறைத்துப் பார்ப்பார்கள். எதையும் சட்டை செய்யாமல், தான் உண்டு தன்  நடை உண்டு என்று வருவான், அவன் மிக ஸ்டைலாக தனது கம்பிரமான நடையை மெஜஸ்டிக்காக தொடர்வான். எனக்கும் அவனுக்கும் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி இருக்கும், எனக்கு அவனைப்  பார்க்கும்போது ஒரு ஞானியோ என்று வியக்கத்தோன்றும். அவனை  பார்த்து நான் கேட்பேன், என்னடா திரும்பலாமா? என்பதற்குள் நங்கள் இருவரும் மலர் ஹாஸ்பிடல் வந்திருப்போம்., தலையை பலமாக அசைத்து திரும்பியும் விடுவான்.

இது என்ன ஆறுதலான ஒரு சிநேகம், அன்பு, துணை. யாரும்  இல்லாதவர்களுக்கு ஆண்டவன் தரும் வரம் போலும், நல்ல வெயிலில் இளைப்பாற நிழல் தரும் மரம் போல. என்னுடன் உணவருந்துவான், நான் வரும் நேரம் என் பிள்ளைகளைவிட அவனுக்குத்தான் தெரியும். என் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் அவன்தான் விழா நாயகன், என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் அவனை வெகு அன்புடன் நடத்துவார்கள். அவனும் அனைவரிடமும் மிகப் பாசமாக அதே சமயத்தில் ஒரு கண்ணியத்துடன் நடந்து கொள்வான்.
ஆண்டுகள் கடந்தது, நான் அமெரிக்கா போக வேண்டிய சூழ்நிலை, என் நண்பர் அவனை பார்த்து கொள்கிறேன் என்றார், கிளம்பும் முன் இருவரும் கட்டிக் கொண்டு கதறி அழுதோம். நான் அவனிடம் சொன்ன மாதிரியே ரெகுலராக skypeஇல்  பேசுவேன். ஓடி வந்து உட்கார்ந்து கொன்டு, வழக்கமான அவன் பாணியில், கண்ணோர சிரிப்பு தலையாட்டல் என்று ஒரு மணி நேரம் சந்திப்போம், பேச்சு முடியும்போது அவன் நிதானமாக இருப்பான், நான் சோகத்தின் எல்லையில் இருப்பேன்.. இந்த இடத்தில டெக்னாலஜியின் டெவெலப்மெண்ட்டுக்கு ஒரு கோடி நன்றி சொல்லவேண்டும்.
திரும்பி சென்னை வந்ததுதான் தாமதம், அவனை பார்த்து உறைந்து போய்விட்டேன், அவனுக்கு என் மேல் கோவம், சமாதானமாக ஒரு வாரம் ஆனது.
இப்படி வளர்ந்தது  எங்கள் உறவு, மீண்டும்  நான் அமெரிக்கா போனபோது அவன் மிக புரிதலோடு, அவங்க வீட்டுக்கா, என்று பார்த்து அவருடன் சென்றும் விட்டான்., இரண்டு மாதங்கள் சென்றது, மே 7 தேதி, என் நண்பரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி  sms, காலையில் குளித்துவிட்டு வந்தவன், வாயிற்படியில் தலையை வைத்துக்கொண்டு  தெருவைப்  பார்த்தவாறே  இறந்துவிட்டான் என்று. ஒரு வேளை தான் போகிறோம், நான் வருவேனா என்றுதான் பார்த்தானோ.

உறக்கம் பிடிக்காமல்  அவனுடய நினைவுகளில் பல நாட்கள் கழிந்தது.......மீண்டும் இந்தியா திரும்பும்போது எப்படி அவனில்லாமல் நான் இருப்பேன் என்று மனம் விடாமல் யோசித்துக் கொண்டே இருந்தது.
சின்ன உறுத்தலாக மனதில், யார் இருந்தால் என்ன, போனால் என்ன, எதுவும் நின்றுவிடுவதில்லை தானே..... சில பல நேரங்களில் பெரு மூச்சு ஒரு நல்ல ரிலீப்..
உறவுகள் சிறுகதை ஆனால் உணர்வுகள் தொடர் கதை. அவனைப்  பற்றியே தினமும் நினைக்கிறேன் அதுவும் காலை நேரங்களில், எங்களை போலவே இருவர்  வாக்கிங் வருகிறார்கள், ஆனால்  என்னவனை போல் இன்னொருவன் கிடையாது. அவன் என் நிழல். அவன் பெயர் shadow. எனதருமை தோழன். 





Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு