வெகு நாட்களுக்குப் பிறகு

வெகு நாட்களுக்குப் பிறகு

வெகு நாட்களுக்குப் பிறகு எழுத உட்கார்ந்தேன் எதை எழுதுவது என்று புரியவில்லை.


யோசித்துப் பார்த்தால் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இந்த அமெரிக்க இமிகிரேஷன் அலுவலகத்தில் குடிமகளாக ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன். இன்றிலிருந்து இந்த நாட்டிற்காக நான் சண்டை போடுவதில் இருந்து எந்தவிதமான காரியமும், இந்த நாடு மேம்படுவதற்காக செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். 

மனதில் லேசாக வலித்தது பறவைகளைப்  பார்க்கும் பொழுது அவர்களுக்கு என்ன விசா தேவையா இல்லை ஒரு குடியுரிமை தான் தேவையாஎங்கு வேண்டுமானாலும் பறந்து சென்று கொண்டு சந்தோஷமாக இருக்கின்றன. மீன்களைப் பார்த்தால் அந்த கடலில் இருந்து இந்த கடலுக்கும், இந்த கடலிலிருந்து அந்த கடலுக்கும், நதியில் இருந்து கடலுக்கும்  என்று சென்று கொண்டே இருக்கின்றன. இயற்கை எல்லா இடத்திலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு சமத்தாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மனிதர்களிடம் மட்டும் எத்தனை கட்டுப்பாடுகள் எத்தனை விதமான கஷ்டங்கள் என்று யோசித்துப் பார்க்கையில், நாமே நம் மனதால் ஏற்படுத்திக் சங்கடங்கள் தான் இவை என்றும் மிக மிக அழகாக புரிகிறது. ஆயினும் சூழ்நிலைக் கைதியாக இருக்கும் பொழுது எல்லாவற்றையும் செய்து கொண்டு தான் செல்ல வேண்டி இருக்கிறது.

ஒரு கையில் அமெரிக்கா கொடியையும், அவர்கள் கொடுத்த அந்த சான்றிதழையும் பிடித்துக் கொண்டு அந்த மேடையில் எல்லோரும் சென்ற பிறகு ஒருவர் ஒருவராக  சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம், ஐ அம் அமெரிக்கன் என்ற போஸ்டர் அருகே நின்று கொண்டு நான், 'இந்திய நாடு என் வீடு இந்தியன்  என்பது என் பேறு' என்று சத்தமாக பாடினேன். ஏனென்றால் மனதில் மிகவும் வலி அதிகமாகி விட்டது. எனக்கு சர்டிபிகேட்டைக் கொடுத்த அந்த பெண்என்னைப் பார்த்து சிரித்தாள்.'ஐ திங்க் யூ ஆர் வெரி ஹாப்பி, கங்கிராஜுலேஷன்ஸ்!' என்று சொல்லிவிட்டு சென்றாள்.

யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் எதுவும் நாம் செய்து நடப்பதில்லை என்பதற்கு என் வாழ்க்கையே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.எங்கோ ஜேசுதாஸின் குரல் ஒலிக்கிறது 'நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா இல்லை, என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா? தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன்? இதுதான் என் கட்சி'

காற்றில் பறந்து சென்று கொண்டிருக்கும் ஒரு காய்ந்த இலை போல, தண்ணீரில் விழுந்து விட்டு பிடிப்பில்லாமல் சென்று கொண்டிருக்கும் driftwood போல, ஏதோ நடந்து ஏதோ சென்று இன்று அமெரிக்காவில் வந்து பிரஜை ஆகியிருக்கிறேன். நானும் என் தலையை தடவி தடவி தான் பார்க்கிறேன் இரண்டு கொம்பு வளர்ந்து விட்டதா? என்று இன்னும் வளரவில்லை:)

ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல விஷயங்கள் நடக்கின்றன. ஏதோ ஒரு ஆர்வத்தில் சென்று ஓஷா கோர்சஸ் படித்த பொழுது இருந்த ஒரு வகுப்பறையில் இருந்த ஒரு நண்பன் இன்னொருவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர் என்னை இன்னொருவருக்கு அறிமுகம் செய்து வைக்க, இன்று நான் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆசிரியை ஆக வேலை பார்க்கிறேன். மீண்டும் என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து Puget Sound கடலைப் பார்த்துக் கொண்டே கேட்கிறேன்,நானே நானா? யாரோ தானா ?என்று.

பல நேரங்களில் எண்ணுவதுண்டு இவ்வாறு வாழ்க்கையில் நடப்பதற்கு காரணங்கள் என்ன? என்று விதியா? கர்மாவா?இதையெல்லாம் யோசிக்கும் பொழுது கண்டிப்பாக மிக மிக எளிமையாக வாழ்ந்த பெற்றோர்கள் எண்ணம் வந்து தான் சொல்கிறது. அவர்கள் ஒரு நாளும் இவ்வாறு அமர்ந்து கொண்டு யோசித்தது கிடையாது வாழ்க்கை என்பது என்ன, ஏன் இப்படி நடக்கிறது? என்றெல்லாம் எண்ணி இருப்ப்பார்களா? என்று தெரியவில்லை.

சமைத்துக் கொண்டே சுலோகங்களை சொல்லி பூஜை செய்து முடித்துக் கிளம்பி ஆபீசுக்கு செல்லும் அம்மா, அம்மாவுடன் லேசாக ஏதோ பேசிக்கொண்டே எல்லா வேலையும் முடித்து யாராவது ஒருவரை சைக்கிளில் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸ் போய்விட்டு சாயங்காலம் டிராமா நடிக்க போய்விடும் அப்பா, சபாவுக்கும் வீட்டிற்கும் இடையில் நாங்கள் நான்கு பேரும் வளர்ந்து இப்பொழுது மிக நல்ல நிலையில் இருக்கிறோம், பார்ப்பதற்கு அவர்கள் இல்லை.

எனக்கு தெரிந்து ஒரு நாள் கூட அவர்கள் அமர்ந்து இரண்டு பேரும் கூட வாழ்க்கை தான் என்ன ஏன் இப்படி இருக்கிறது என்றெல்லாம் பேசியதே கிடையாது.

எப்போதும் கடலைப்  பார்த்தாலும், பார்த்துக் கொண்டு அதன் அழகில் மயங்கி இருந்தாலும் கூட உள்ளூர மனதில் தோன்றிக் கொண்டே இருப்பது, வெங்காயம் மாதிரி தான் வாழ்க்கை! உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.கடைசியில் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்பதுதான் உண்மை. இதில் நாம் கண்டுபிடிக்க முயல்வது தான் நமது அர்த்தம். இருக்கும் வரை எல்லோருடனும் அன்புடன் இருந்து பணிவாக நடந்து,  நன்றாக இருந்து சென்று விட்டார்கள் நம் தாய் தந்தையர். ஆனால் நாம் தான் இப்படி மாட்டிக் கொண்டு முடிக்கிறோம். அரைகுறையாக டெக்னாலஜி தெரிந்துகொண்டு, ஆங்கிலமும் அப்படித்தான்! அரைகுறையாக தெரிந்து கொண்டு மொத்தத்தில் வாழ்க்கையே  அரைகுறையாகத் தான்  போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு விஷயம் நன்றாக புரிகிறது எதுவும் நாம் கேட்டு நடப்பதில்லை, நடப்பதில் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று, நாம் நான் நான் என்று யோசித்து யோசித்து வாழ்க்கை பாதிக்கு மேல் போய்விட்டது.

என் அம்மா சாயங்கால வேளைகளில் சில சமயம் சொல்வாள், 'என்ன வேண்டி கிடக்கு தத்துவமும் வேதாந்தமும், அழகா சல்வார் கமிஸ் போட்டுக் கொண்டு பிள்ளைகளுடன் பேட்மிட்டன் விளையாடி விட்டு வா ! என்பார். அப்பொழுது எனக்கு வயது 34 தான், அப்பொழுது இருந்து இந்த சிந்தனை உண்டு. அடிக்கடி சொல்லுவாள் 'வெந்த சோத்த தின்னு வேளை வந்தா போகவேண்டிய கட்டை, இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கிற? ஜாலியா இரு. அழகான  குழந்தைகள் கை நிறைய சம்பாதிக்கும் கணவர், என்ன வேண்டிக்கிடக்கு வேதாந்தம்?'அவள் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.

நல்லவேளை அம்மா போய்ச் சேர்ந்த பிறகுதான் கை நிறைய சம்பாதித்த கணவர், அம்மாவிற்கு பின்னால் சென்று விட்டார் சம்பாதித்ததை கையில் எடுத்துக் கொண்டு போய் விட்டார் போலும்?! என்னையும் என் பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு ,

பிறகு நடந்ததெல்லாம் கதையா கனவா என்று எனக்கு தெரியவில்லை. ஏதோ படித்து, ஏதோ முன்னுக்கு வந்து ,ஏதோ பிசினஸ் நடத்தி ஹ்ம்ம் எதை எழுதுவது எதை விடுவது ? என் வாழ்க்கையை ஒரு சீரியலாக எடுத்தால் ஒரு ஐந்து வருஷம் போகுமோ என்னவோ யோசித்துப் பார்ப்போம் எடுக்கலாமா வேண்டாமா? என்று அங்கேயும் யோசனை தான் யோசனை  யோசனை

 நான் நினைக்கிறேன், வாழ்க்கையில் தனிமை என்பது என்றும்  வரப்போவதில்லை, ஏனென்றால் நம் மனம் நிற்கும் போது தான், எண்ண ஓட்டங்கள் நிற்கும் போது தான் நமக்கு தனிமையும், அது தரும் அமைதியும் வரும் இல்லையென்றால் தனிமை என்பது இல்லை.

கற்பகத்துடைய சின்ன ஒரு குறும் செய்தி, அவர்களுடைய தந்தையை பற்றி படித்தவுடன் பழைய நினைவுகள் வேகமாக ரிவர்ஸ் கியரில் ஓடிக் கொண்டிருக்கிறது. நில்லாமல் போகும் இந்த ஆக்சன் ரீபிளேவை  எழுத்துக்களில் வடிக்க ஆசையாக இருக்கிறது.

 பார்ப்போம் என்றில் இருந்து ஒரு பக்கம் ஒரு பக்கமாவது தினமும் எழுத வேண்டும்.

அன்புடன் ஜெ 



Comments

  1. Very well written.

    ReplyDelete
  2. Purposeless life. Emptiness. Nostalgia. Not being in control.
    Jayanthi,

    Everything that has happened was perfect. Everything that will happen will be perfect.
    You can not see the perfection.

    ReplyDelete
  3. பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் மலர் இன்று மனம் சுருங்கி வாடுகிறது. பலர் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த பொன் மனம் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகிறது.

    எதிலும் படாமல், எதிலும் ஒட்டாமல் காற்றில் அலை பாயும் காய்ந்த சிறகு போல இருப்பதில் பெரிய அர்த்தம் உண்டு தங்கையே; என்னைத் தந்தேன் உன்னிடம் என்று இறைவனை சரணடைந்து பாடும் உள்ளதிற்கே இந்த சுதந்திரம் கிடைக்கும்.

    நீ அறியாததோ இந்த உண்மை.?

    மற்றோர் உள்ளம் துள்ள ஒரு ஆனந்தம் கவிதை தருவாயோ நாளை.?

    ReplyDelete
    Replies
    1. Thinking of doing one on our weekend trips while in Mumbai!!

      Delete
  4. அருமை. படிக்கும் போது மனம் ஏனோ பாரமாகி கண்களில் கண்ணீர் துளி.

    ReplyDelete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!