அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

 இடம் சென்னை-தமிழ்நாடு-இந்தியா 

மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் வெள்ளீஸ்வரர் கோயில் வாசலில் இருக்கும் பூக்காரி செங்கமலம், சாமிநாதனை பார்த்து சிரித்தவாறே 'என்ன அய்யா கல்யாணமா ?'என்றாள்.'அமாம்.பத்திரிகை வந்தவுடன் தரேன், கண்டிப்பா வந்துடு. கல்யாணம் முடியறவரைக்கும் கூட ரெண்டு முழம் பூ குடுத்துடு' என்றவாறே பூவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். கோயில் வாசலில் வெளியே வந்து கொண்டிருந்த குருக்களும் 'கல்யாணமா? கேள்விப்பட்டேன், சந்தோஷம் மாமா'! என்றார். 'ஆமாம்' வாங்கோ, கண்டிப்பா' என்றார் ஸ்னேஹமாக சிரித்துக்கொண்டே. வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய நோட்டுப்புத்தகத்தில் கல்யாண அழைப்பிதங்கள் பக்கத்தை திறந்து, பூக்காரி செங்கமலம் , கோயில் விஸ்வநாத குருக்கள் என்று எழுதிக்கொண்டார். உள்ளிருந்து தண்ணீர் கொண்டுவந்த மனைவியிடம் 'லட்சுமி, இதுவரைக்கும் 321பேர் ஆயிடுது, உனக்கு தெரிஞ்சவா யாராவது இருந்த இந்த பக்கத்தில எழுதிடு, யாரும் விட்டு போய்ட கூடாது கேட்டியா,' என்றார். லக்ஷ்மியும் 'நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம், இருந்திருந்து முதல் கல்யாணம், எல்லாரையும் கண்டிப்பா கூப்பிடனும்,' என்றவாறே வாங்கி வந்த சாமான்களை உள்ளே எடுத்துச் சென்றாள். 

சாமிநாதன் ஈஸிசேரில் சாய்ந்தபடி, மனதில் நினைத்துக்கொண்டார், கல்யாணமா சும்மாவா. எல்லோரும் வந்து, சந்தோஷமாக புது மணத்தம்பதிக்கு அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்து, திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சென்றால்தான் ஒரு நிறைவு. யாரையும் விடக்கூடாது,பத்திரிகை விநியோகத்தை , ஈமெயில், போஸ்டல், நேரில் சென்று அழைப்பது மூன்று பாகமாக பிரித்து செய்ய தீர்மானித்து இருந்தார்.பிள்ளைகள் அவரவர் நண்பர்களை அழைக்க வேண்டும் என்று விட்டுவிட்டார். இப்படியாக கிட்டத்தட்ட நானுறு பேர் அவரது லிஸ்டில் இருந்தனர். எப்படி இல்லாமல் இருக்கமுடியும்.கல்யாணம் ஆகி 35 வருடங்களாக இதே சுற்றுப்புறத்தில் வாழ்கின்றதால் அனைவருமே ஒரு குடும்பம் போல பழகி இருப்பதாலும் இவ்வளவு நட்பு , சுற்றம் என்றாகிவிட்டது.யாரும் மனம் நோகாமல்,எல்லோருடனும் சுகம் துக்கம் பகிர்ந்து வாழுகின்ற போது யாரை விடுவது. சிந்தனை வேகமாக சென்று .அப்படியே அசந்து தூங்கிப்போய்விட்டார் .

அமெரிக்கா சியாட்டில் மாநகரம் - பெண்ணிற்கு கல்யாணம், அவர் புலம் பெயர்ந்த இந்தியர், ஒரு AI சயின்டிஸ்ட். அவரது பெண், தன்னுடன் நண்பராக இருந்த பையனுடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். இனி கீழே அவர்களது உரையாடல் 

பெண்:- அப்பா. கோர்ட் கல்யாணம் நாங்கள் போன மாதம் செய்துகொண்டோம்.

அப்பா :- வாவ் ! வாழ்த்துக்கள்.

 பெண்:- என் திருமணத்தேதி(மீண்டும்) முடிவுசெய்துவிட்டோம். நீயும் அம்மாவும் என்ன செய்ய வேண்டுமென்று ஈமெயில் அனுப்புகிறேன். மொத்தம் நூறு பேர்களைதான் தேர்வு செய்துஇருக்கிறோம் பத்திரிகை அனுப்புவோம்,இதில் நம் குடும்ப மக்கள் ஏழுபேர் (சகோதரர்கள்,அம்மா அப்பா அவ்வளவுதான்) 

அப்பா:- அப்படியா நல்ல செய்தி வாழ்த்துக்கள் என்னுடைய நண்பர்களில் சிலரை நன்றாக உனக்கும் தெரியுமே அவர்களை அழைப்பாயா ?

 பெண்:- இல்லை அப்பா இந்த விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள். 

அப்பா:- ஹ்ம்ம் 

பெண்:- எனக்கு மெஹெந்தி போட்டுக்கொள்ளவேண்டும் அதற்கு வேண்டுமானால் உங்கள் நண்பர்களை அழைத்துக்கொள்ளுங்கள். மெனு நீங்களே முடிவுசெய்து அதற்கு பணமும் கொடுத்துவிடுங்கள். கண்டிப்பாக மசாலா chai வேண்டும். இரண்டு மணியில் இருந்து 4  மணிவரைதான் நேரம் ஒதுக்கவேண்டும், 

அப்பா:- உன் கல்யாண தேதிக்கு முதல் நாள் weekday வருகிறது என் நண்பர்களால் முடியுமா என்று தெரியவில்லை. 

பெண்:- என்னால் அதற்கெல்லாம் கவலைப்பட முடியாது. 

அப்பா:-ஹ்ம்ம் 

பெண்:- நான் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். ஏதாவது கேட்க வேண்டுமா? நன் சொல்ல மறந்துவிட்ட ஒரு விஷயம், நம் குடும்ப உறுப்பினர் யாரும் எங்கள் இருவரின் உடை நிறங்களை தவிர்க்க வேண்டும், இன்னும் ஓரிருநாளில் என்ன நிறம் என்பதை ஈமெயில் மூலம் அனுப்பிகிறேன். எந்த இடம், என்ன டின்னெர். என்ன விதிமுறைகள் 'protocol என்று ஈமெயில் அனுப்பிகிறேன். சரியா? 

அப்பா:- ஓகே. ஏதாவது உதவி வேண்டுமென்றால் சொல். மீண்டும் வாழ்த்துக்கள்.

பெண்:- கண்டிப்பாக சொல்கிறேன்.ஒன்றும் தேவை இருக்காது. நன்றி.

இந்த உரையாடல் ஆங்கிலத்தில் நிகழ்ந்தது.

குறிப்பிட்ட மணநாளில் இரண்டு திருமணங்களும் நடந்தது.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். நம்நாட்டின் விருந்தோம்பல் பண்பு, கூடி மகிழும் இன்பம், சின்ன சின்ன சந்தோஷங்கள், ஆடை அணிகலன்கள், அலங்காரம், அதில் பிறக்கும் மகிழ்ச்சி, கடை கன்னி என்று ஒன்றாக சென்று புத்தாடைகள் வாங்கும் சந்தோஷம், அங்கே நிகழும் கலாட்டா உரையாடல்கள் சுவாரஸ்யமான அனுபவம். 

மேற்கூறிய எதுவும் இல்லாமல், ஒரு கார்பொரேட் நிகழ்ச்சி போல நிகழெந்தேறியது அமெரிக்க திருமணம். காக்டெய்ல் மாலை, நடன இரவு, டின்னெர் இவற்றிக்கிடையே 7 வருடம் நணபர்களாக இருந்த இருவர்  கணவன் மனைவி ஆனார்கள். 

ஹ்ம்ம்ம்ம்ம் ! கலாச்சாரம் மாறித்தான் போய்விட்டட்து.

எனக்கு புரியாதது , 7 வருட உறவுக்குப் பின் எதற்கு இந்த ஆடம்பர திருமணம்? யாருக்கு நாம் நம் உறவை வெளிப்படுத்தவேண்டும்? எல்லாவற்றிலும் வித்தியாசமான சிந்தனை கொண்ட இந்த அடுத்த தலைமுறை இப்படி பணம் செலவழித்து சாதிப்பது என்ன. உங்கள் யாருக்கேனும் தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள்.








Comments

Popular posts from this blog

வெகு நாட்களுக்குப் பிறகு

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.