இயற்கை
இயற்கை
சிந்தனை
மனிதர்களை மரம் என்று கடிந்து கொள்வது மரத்திற்கு இழுக்கு! வானமாவது எங்கும் வியாபித்து "நான் நான்" என்று சொல்லாமல் சொல்கிறது.
மரங்கள் தான் பாட்டுக்கு நின்ற இடத்தில் நின்று ஒரு தொழிற்சாலை போல தன்னுடைய வேலையைத் தன்னுள் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுற்றுப்புற சூழல் சுத்திகரிப்பு, பிராணவாயுவைத் தந்து, நிழல் தந்து, கனி தந்து, பட்டபின் உடலைத் தந்து - அப்பப்பா!
மரங்களே, உங்களை நேசிக்கிறேன்! இந்த பொறுமையான மௌனத்தையும், நிச்சலனமற்ற மனதையும் எனக்குத் தருவாயா நட்பின் பரிசாக?
பிராணிகள் - வீட்டில் வளர்பவையோ, காட்டில் திரிபவையோ - "தான் உண்டு, தன் வேலை உண்டு" என்று தான் வாழ்கின்றன. இவற்றுக்கும் காதல், கட்டுப்பாடு, குடும்பம் என்ற அமைப்புகள் உள்ளன.
பார்த்துப் பழகி உணர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல உயரிய பண்புகள் கொண்ட பிராணிகள் இயற்கையின் ஒரு உயரிய படைப்பு.
ஏன் இப்படி இயற்கையை வேறுபடுத்தி, "மனிதன் வேறு, இயற்கை வேறு" என்று தனிமைப்படுத்திப் பார்க்கிறேன் என்றோ, மனிதன் ஒரு மட்டமான படைப்பு என்றோ நான் நினைக்கிறேன் என்று தவறாக எடை போட வேண்டாம்.
இயற்கையின் மிக உயர்ந்த படைப்புதான் மனித இனம்! நீங்கள், நான், அவன், அவள், இவர், அவர் - எவ்வளவு அரிய, பெரிய, உயர்ந்த பிறவி!
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்பது சீரிய உண்மை.
குழந்தைப் பருவத்தில் பயமின்றி, கள்ளத்தனம் என்று தெரியாத பொழுது நாமும் பசுங்கன்றுகளாகத்தான் திரிந்தோம். வளர்ந்து முதிர்ந்து மரமாகின்ற நிலையில், இளங்கன்றின் மனதில் புகும் மாயை, கள்ளம், வெளி உலகத்தின் பாதிப்புகள், போட்டி, பொறாமை, பொச்சரிப்பு எல்லாம் அந்த இயற்கையான innocence மீது தூசி படியச் செய்கிறது. தூசிகள் அதிகமாக, அதன் கனத்தில் இயல்பான இயற்கை குணம் மறைந்து விடுகிறது.
ரமணனின் அருளாலும், ஆசிரமத்திற்குப் போவதாலும் இன்றும் இயற்கை அழகை எந்த இடத்தில் இருந்தாலும் சரி, நின்று ரசிக்க முடிகிறது.
திடீரென்று ஜன்னல் அருகே மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் ஏதோ எனக்கு "குட் மார்னிங்" சொல்ல வந்தது போல ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு "படபட" என்று பறக்கும். தினமும் இரண்டு காக்கைகள் (அம்மாவும் அப்பாவோ?) சமையலறை ஜன்னலில் வரும்.
இவைகளை ரசிக்கையிலேயே, காணாமல் போய்விட்ட சிட்டுக்குருவிகளைத் தேடுகிறது மனது.
எங்கே எங்கே தொலைந்தது எனது இளமைக் காலம்? எவ்வளவு மாற்றங்கள்! இவை அனைத்தும் இயற்கை நடவடிக்கைகள்.
ரமணா ஆசிரமத்தின் வெளிப்புறத்தில் ஸ்கந்தாஸ்ரம பாதையில் உட்கார்ந்தால் மனதில் ஏற்படும் ரம்யம் சொல்கிறது: "நீ, நான், அது, இது எல்லாமே அழகு, அன்பு, காதல், பாசம்."
என்றும்
அன்புடன்
ஜெ...
Comments
Post a Comment
leave your feedback please