கண்கள் இரண்டால்......
கண்கள் இரண்டால்......
இன்றைய வித்தியாசங்கள் எண்ணத்தில் இல்லை, மனிதர்களில்! நான் சொல்வது வித்தியாசமான குணாதிசயங்களை அல்ல... முகங்களை.
இங்கு "தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" பட வசனம் நினைவுக்கு வருகிறது:
சிம்ரன்: நீ இதுவரையில் யாரையும் காதலித்தது கிடையாதா?
ராஜ்: ஊஹூம்.
சிம்ரன்: அப்போ கல்யாணம்?
ராஜ்: சேச்சே! கல்யாணம் எல்லாம் பண்ணிண்டு எப்படி லைப் முழுவதும் ஒரே பெண்ணைப் பார்த்துண்டு இருக்கிறது? சில பேருக்கு கண் அழகு, சில பேருக்கு உதடு அழகு... இப்போ உனக்கு...
சிம்ரன்: (முறைத்துப் பார்த்துவிட்டு) நான் ட்ரெயினுக்கு போறேன்.
என்றவாறு திரும்பி ரயிலை நோக்கி சிம்ரன் செல்வார். (ஷாருக் கான், கஜோல் நடிப்பில் இது ஒரு ஹாப்பியான படம்)
இவர் சொல்வதில் ஒரு உண்மை உள்ளதுதான். எவ்வளவு அழகான படைப்புகள்! சிலருக்கு கண், இன்னும் சிலருக்கு மூக்கு, உதடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
கண்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த அங்கம். நடிகர் ஜெய்ஷங்கருக்கு மிக சிறிய கண்கள், ஆனால் அதில் ஒரு உற்சாகமும் குறுகுறுப்பும் இருக்கும். சிவாஜி கணேசனின் கண்களில் ஒரு கம்பீரம் தெரியும்.
இப்படி தேடி தேடி கண்களைப் பார்க்கும்போது, நடிகை ஸ்ரீவித்யாவின் கண்கள் - அப்பப்பா! அதன் மீது எனக்கு தீராத காதல். அகலமான வெண்பரப்பில் கருகருவென்று எத்தனை உயிர் அவர் கண்களில்!
"அபூர்வ ராகங்கள்" படத்தில் அவர் கமலை ஒரு காதல் வாய்ந்த பார்வை பார்ப்பார். அதில் காதல், பாசம் கலந்த ஒரு வெகுளித்தனம் (innocence) - அது கவிதை. இவர் கண்கள் மட்டும் எப்படி இப்படி என்று பல முறை வியந்திருக்கிறேன்.
கண்களைப் பற்றி ஆராய்வோம். கண்கள் பேசும் மொழிதான் என்ன? அன்பு, பாசம், காதல், ஆசை, பயம், பொறாமை, மோகம், காமம் என்று பல உணர்ச்சிகளின் வெளிப்பாடு கண்களின் மூலம் மட்டுமே தெரியும்.
இந்த உடல் மொழி (body language) என்கிறார்களே, அதைக் கொஞ்சம் மாற்றி "கண் மொழி" என்று சொல்லலாம்.
சிலரின் கண்களில் எப்போதும் உற்சாகம் மண்டிக் கிடைக்கும். உதடுகளை விட கண்களே புன்னகைக்கும். இந்த கண்கள் சிறு சோகம் வந்தால் கூட அந்த உற்சாகம் வடிந்து சோகம் கப்பி விடும். மீண்டும் அந்த கண்கள் ஒளிமயமாகும் வரை நாமும் சோர்ந்து விடுவோம்.
இதைப் படிக்கும் நம்மில் எத்தனை பேர் நம் கண்களை அனுபவித்திருக்கிறோம்? இனிமேல் கண்ணாடியில் முகம் பார்க்கும்போது கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்.
கண்ணால் படிக்கிறோம், பேசுவதும், கேள்வி கேட்பதும். நன்றி சொல்வதில் நாட்கள் கடந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் நான் வியக்கிறேன் - நமது உடலைவிட மிகப் பெரிய டீம் உண்டா? மூளை சொல்ல, வெளிச்சம் உதவ எத்தனை வித்தியாசமான விஷயங்களைப் பார்க்கிறோம் - மனிதர்கள், இயற்கை, இன்னும் என்னென்னவோ.
டவுன்டவுனில் நடைப் பயிற்சி செய்யும்போது எதிர்ப்படும் மக்களைப் பார்க்கும்போது, படைப்பில் இத்தனை nuances என்று தினமும் எண்ணி மாய்ந்து போகிறேன். நிறம், உடல் வகை, கண்களின் நிறம், கூந்தலின் நிறம்... "இன்னும் மேலே" ரஜினியின் mind voice கேட்கிறது.
படைத்தல் தொழில் செய்பவர் எவராயினும் (எதற்கு வம்பு) எதுவாயினும் hats off!
திடீரென்று இந்த மாதிரி எழுத தோன்றியதற்கு காரணம் என்று கேட்பீர்கள் என்றால், எதேச்சையாக YouTubeல் "அபூர்வ ராகங்களின் கேள்வியின் நாயகனே" என்ற பாடல்!
https://youtu.be/CX5G707aKsM?si=8eCztDpHLk2nSjo_ஒரு முறை சென்று பாருங்கள். நான் சொல்லிய எல்லா பாவங்களும் ஸ்ரீவித்யாவின் கண்களில்!
மீண்டும் சந்திப்போம்,
அன்புடன்
ஜெ...
Comments
Post a Comment
leave your feedback please