எண்ணச்சங்கிலியா? எண்ணவிலங்கா

எண்ணச்சங்கிலியா? எண்ணவிலங்கா 

எண்ணங்கள் - ஒன்றிலிருந்து பலவாய்! தொடர்பற்ற ஓட்டங்கள், தொடர்ந்து செய்யும் மாற்றங்கள், ஊற்றாக வருகின்ற, வந்தவை அப்படியே சென்று வரப்போவதையும் இணைக்கும் பாலங்கள். அதில் நம் முனைப்பு, அதற்குள் வரும் விளைவுகள் - அப்பப்பா! நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம், ஆனால் எண்ணங்களை?

இன்று நான் த்யானம் செய்வதற்குமுன் தீர்மானமாக சொல்லிக்கொண்டேன் - "கண்டிப்பாக நோ thoughts என்று." எகத்தாளமாக சிரித்தது! இன்று மீண்டும், தீர்மானமாக சொல்லிக்கொண்டேன் - "கண்டிப்பாக எண்ணங்கள் வேண்டாம்!" அப்போது என் மனம் எகத்தாளமாக சிரித்தது. அல்லது எண்ணமே சிரித்ததா?

எண்ணங்களை நிறுத்த நினைப்பதே ஒரு எண்ணம்தான். "எண்ணம் வேண்டாம்" என்று எண்ணுவதே எவ்வளவு முரண்! இது த்யானம் செய்யும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் அழகான சிக்கல்.

மனதா? எண்ணமா? ஒரு சிறிய, மிக சிறிய விதை போதும். வ்ருக்ஷம் போல வளர்ந்து கிளைகளுடன் தழைத்து, மீண்டும் வேரூன்றி அடுத்த மரமும் தோன்றி... ஹம்ம்ம்ம்ம்ம்!


உங்களில் எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை. IISC (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு) வளாகத்தில் இருக்கும் கொடிகளையும், அவை சென்று வளர்ந்து பின்னிப்பிணைந்து இருக்கும் எண்ணற்ற மரங்களையும். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என் மனம் அதை எண்ணங்களுடன் இணைத்துப் பார்க்க தவறியதில்லை.

எண்ணங்கள் என்பது ஒரு முடிவில்லாத பயணம். அவை நம் மனக் கடலில் எழும் அலைகள். சில நேரங்களில் புயலாக, சில நேரங்களில் அமைதியான அலைகளாக. இந்த அலைகளுடன் போராடுவதைவிட, நீந்தக் கற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது.

எண்ணங்களின் இந்த அழகான, சிக்கலான, வேதனையான, மகிழ்ச்சியான பயணத்தில் நாம் அனைவரும் துணையாக இருக்கிறோம். அந்த பயணத்தின் ஒவ்வொரு அடியும் நம்மை நாமே புரிந்துகொள்ள உதவுகிறது.

எண்ணங்களுடன் நட்பு - ஒரு எஸ்கேப்பிசமோ?

வெகுவான பல அறிஞர்களும், சான்றோர்களும் சொல்லுகிறார்கள் முன்பும் இப்போதும் கூட - "எண்ணங்களை தடுக்காதீர்கள்" என்று. மேலும் சொல்லுகிறார்கள், "எண்ணங்களை எதிரியாக பார்க்க வேண்டியதில்லை. அவைகளை முழுமையாக நிறுத்தவும் முடியாது. அவற்றுடன் நட்பு கொள்வதே சிறந்த வழி."

அவை வரும்போது வரட்டும். அவை போகும்போது போகட்டும். நாம் அவற்றின் சாட்சியாக, பார்வையாளராக இருக்கலாம். மேகங்கள் வானத்தில் வந்து போவதை பார்ப்பதுபோல, எண்ணங்களை நம் மன வானத்தில் வந்து போவதை பார்க்க சாத்தியப்படுமா?

எண்ணங்கள் சில நேரங்களில் நம்மை வருத்தினாலும், அவை மனித வாழ்க்கையின் அழகான பகுதி. அவைகள் இல்லாமல் நம்மால் உணர முடியாது, நேசிக்க முடியாது, கற்பனை செய்ய முடியாது, கனவு காண முடியாது.

எண்ணங்கள் நம்மை மனிதர்களாக்குகின்றன. அவை நம் வேதனைகளின் மூலமும், நம் மகிழ்ச்சிகளின் அடிப்படையும்.

எண்ணங்கள் வெறும் மன அலைகள் மட்டுமல்ல. அவைகளுக்கு படைப்பு சக்தி உண்டு. ஒரு கலைஞனின் எண்ணம் ஒரு ஓவியமாக மாறுகிறது. ஒரு எழுத்தாளனின் எண்ணம் கவிதையாக பூக்கிறது. ஒரு தாயின் எண்ணம் அன்பாக வெளிப்படுகிறது.

எண்ணங்கள் நம் செயல்களின் விதைகள். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாக மலர்கின்றன. தீய எண்ணங்கள் தீய செயல்களுக்கு வழிவகுக்கின்றன.

எண்ணங்களின் இடையில் அமைதியின் சிறு தருணங்கள் உண்டு. ஒரு எண்ணம் போனதும், அடுத்த எண்ணம் வருவதற்கு முன்பான அந்த இடைவெளியில் ஒரு ஆழமான அமைதி நிலவுகிறது. அந்த அமைதியில்தான் நம் உண்மையான இயல்பு ஒளிர்கிறது.

எண்ணங்கள் வெறும் தற்காலிக அலைகள் அல்ல. அவை நம் நினைவுகளின் அடித்தளத்தில் வேரூன்றுகின்றன. கடந்த காலத்தின் அனுபவங்கள், நிகழ்காலத்தின் புரிதல்கள், எதிர்காலத்தின் கனவுகள் - இவை அனைத்தும் கலந்து எண்ணங்களின் வடிவம் பெறுகின்றன.

ஒரு பழைய பாடல் கேட்டதும், பத்து வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் வெள்ளமாய் பெருகுகின்றன. ஒரு வாசனை நுகர்ந்ததும், பாட்டியின் சமையலறை நம் கண்முன் தோன்றுகிறது. எண்ணங்கள் காலத்தை வென்று நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

எண்ணங்கள் ஒரு சமூகமோ?

ஏனென்றால் அது என்றுமே தனியாக வருவதில்லை.

எண்ணங்கள் தனித்தனியாக வருவதில்லை. அவை கூட்டமாக, குடும்பமாக வருகின்றன. ஒரு எண்ணம் இன்னொரு எண்ணத்தை அழைக்கிறது. அது மூன்றாவதை அழைக்கிறது. அப்படியே ஒரு எண்ணச் சங்கமம் உருவாகிறது.

இரவு படுக்கப் போகும்போது, ஒரு சிறிய கவலை தலைதூக்குகிறது. அது மெல்ல மெல்ல வளர்ந்து, நாளை செய்ய வேண்டிய வேலைகள், பிரச்சினைகள், தீராத கேள்விகள் என்று மனதை நிரப்பி, தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கும் போது, திடீரென விலங்குகளால் எண்ண முடியுமா? நம்மைப்போல யோசிக்கும் என்றெல்லாம் எண்ண சங்கிலி துவங்குகிறது.

முதலில் எண்ணத்தின் ஆரம்பம் என்னவாக இருக்க கூடும் என்று எண்ணினேன். பாருங்களேன், ஒருபக்க கட்டுரை அளவு ஏதேதோ வந்து கொண்டே இருக்கிறது.

எண்ணங்கள் நம் அனுமதி கேட்டு வருவதில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை தோன்றுகின்றன. இதுதான் மனதின் சுதந்திரம். இதுதான் அதன் சாபமும் வரமும்.

என்ன, நீங்களும் எண்ணத்தைப் பற்றி எண்ண ஆரம்பித்துவிடீர்களா?

நான் முன்பே எழுதி இருக்கிறேன் போன கட்டுரையில் - ஒருவரும் தனிமையில் வாடுவது கிடையாது. நிழல் போல... இல்லை, இல்லை, நிழல் தெரிய வெளிச்சம் தேவை. 

உயிர் போல போகும் வரை நம்முடன் எண்ணங்கள் இருக்கும். இதில் தனிமை எங்கே?

சங்கிலி போல அழகுக்காக அணிந்தால் எண்ணங்கள் நன்றுதான், அதுவே கழுத்தை நெறிக்கும் விலங்காக மாறினால் ? 

உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் - எண்ணத்தை கைவிட, குறைக்க ஏதேனும் வழி இருந்தால்.

அன்புடன் 

ஜெ....

Comments

  1. அழகு. அருமை. " அலைகளுடன் மோதுவதை விட நீந்த கற்றுக்கொல்வது சால சிறந்தது " மிக்க எளிய அறிவுரை. ஜக்கு

    ReplyDelete
  2. There is a concept of flow state. காரியத்தில் கண்ணாய் கவனத்தை குவிப்பதுதான் எண்ணங்களில் இருந்து விடுபட வழி.

    ReplyDelete
  3. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது


    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பெரியவன்
    சிறியவன்
    நல்லவன்
    கெட்டவன்
    உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்
    எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய்
    எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய்
    தவறுகள் செய்தவன் எவனுமே
    தவிக்கிறான் அழுகிறான்
    தவறுகள் செய்தவன் எவனுமே அழுகிறான்
    எவனுமே அழுகிறான்...


    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே நண்பனே நண்பனே
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன் ஏன் நண்பனே.

    ReplyDelete
  4. ஒருவர் எண்ணுவது என்னென்று பிறருக்குத் தெரிவதில்லை… இதன் மாயம் எதுவோ?

    ReplyDelete
  5. lovely Jayanthi. Flow . written with ease. No Nerudal.. As if you are speaking to the reader. Style and thought. Worrying and planning and thinking and overthinking . difference it is understood and then life will be simple. Serious subject but dealth with your own punch. Will surely create ripples with the reader. Great . Keep writing . Friend.

    ReplyDelete

Post a Comment

leave your feedback please

Popular posts from this blog

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.