சுகமா? சோகமா?
சுகமா? சோகமா?
பிரிவுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமான அனுபவங்களைத் தரும் போல்!
சில சமயங்களில் பிரிவுகள் சுகமே. வெகுவான பல சமயங்களில் பிரிவுகள் சோகம்தான்.
இறந்தபோது சுகம் சோகம் இரண்டுமே! புற்றுநோயில் வேதனைப்பட்ட அம்மா இறந்தபோது ஒரு கணம் மனம் வெகுவாக லேசாகிப் போனது சுகமா? சகோதரர்களுடன் இடுகாட்டிற்குச் சென்று அவள் மீது கொள்ளி வைத்த தருணத்தில் "இனிமேல் அம்மாவைப் பார்க்க முடியாது" என்ற உள்ளுணர்வு மடை திறந்த வெள்ளமாகக் கண்களில் கண்ணீர்! இது சோகம் போலும்.
தினமும் அம்மாவிற்குக் காரியம் - அண்ணா சம்பிரதாயம் தவறாமல் செய்யும் நாட்களில், அந்தி சாயும் நேரத்தில் கொட்டிவாக்கம் மொட்டை மாடியில் அண்ணாந்து வானத்தைப் பார்த்து வாய்விட்டு அழுது, "அம்மா, இந்த மேகங்களுக்கு இடையில் ஒரு நொடி உன் தெற்றுப்பல் தெரிய ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாயா?" என்று பிதற்றியபோது சோகம்.
அந்தி சாய்ந்து இருள் சூழ துவங்கும் நேரத்தில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் தோன்றும்போது, "நீதான் என் அம்மாவோ?" என்று ஆச்சரியப்பட இது சுகமோ!
என்னைப் பெண்ணாய் இங்குத் தந்து சீராட்டி, பாலூட்டி, என் கழிவு துடைத்து, பெரிய மனுஷி ஆன அன்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை மெதுவாகக் கோர்த்துச் சொல்லாமல் சொல்லிய விஷயங்கள் பல.
அதே அம்மா, புற்றுநோயில் தவிக்கும்போது அவள் எனக்குச் செய்த அத்தனையும், அவளுக்கு நான் செய்ய ஒரு வாய்ப்பு. பல் தேய்த்துவிட்டு, குளித்துவிட்டு, கழிவு கற்றி, முகத்தில் பொட்டிட்டு பளிச்சென்று விபூதி இட்டு ஒரு நிமிடம் நின்று பார்ப்பேன். எப்படி இருந்த என் அழகான அம்மா, வற்றிப்போய் உயிர் மட்டுமே ஊசலாடிக்கொண்டிருக்கும் அம்மா, அந்தக் கணமே மீண்டும் அழகாகிவிடுவாள். சுகமான அனுபவங்கள்.
பாலூட்டிய கடனை அடைக்க முடியுமா? நான் அம்மாவிற்கு இரத்தம் கொடுத்த அன்று தோன்றியது, "இந்த ஜென்ம கடன் உன்னுடன் முடிந்துவிட்டது" என்று... சுகமான சோகம் அன்று நான் அனுபவித்தேன்.
எழுத்தின் இன்பம்
இன்னும் எவ்வளவோ எழுதத் தோன்றுகிறது... இந்த நாட்களில் நான் வியக்கிறேன், சின்ன மனதில் ஒரு வானளவு, கடலளவு எண்ணங்களா என்று?
சொல்லுவதில் இருப்பதைவிட எழுதுவதில் உள்ள சுகம், சுவை இரண்டும் ஈடு செய்ய இயலாது. மனதையே முன்னால் இருத்துவது தாய்மொழியில். உள்ளத்தில் இருப்பது வெளிப்படும்போது, தாய் அன்பை உணர்கிறேனோ தாய்மொழியில்!
அன்புடன்
ஜெ...
Amazing expression of your feeling of losing mother. I can corelate my feeling when my father passed away. Time made it go past that and that feeling is distance memory now...
ReplyDelete"அம்மா"டி என்று உட்காரும்போது வரும் சுகம், அதற்கு முன் கால் கடுக்க நின்ற சோகத்தால் இன்னும் கொஞ்சம் அதிக இதமாகத் தோன்றும். அதுபோல் அவர் நினைவுகள் உங்களுக்கு கூடுதல் ஆறுதல் அளிக்கட்டும். இழப்பை காலம் மாற்றாது எனினும்.. இதையத்தை காலம் ஆற்றட்டும் தேற்றட்டும்.
Delete