ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.
டெல்லியில் இருந்து அண்ணாவும் கிளம்பிவிட்டான். அமெரிக்காவில் இருந்து அக்காவும் புறப்பட்டுவிட்டாள். அப்பாவுக்கு ஒரு நாள் முன்பு மிகவும் உடம்பு நலமில்லாமல் போக, டாக்டர் வந்து பார்த்துவிட்டு சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போனார்.
அப்பாவிற்கு எப்படி இருந்தாலும் 94 வயதாகி விட்டது, முடிய போகிற வாழ்க்கைதானே என்று எல்லோரும் அலட்சியமாக இருக்கும் பொழுது, அவர் சுறுசுறுப்பாக தனது வேலையை பார்த்துக் கொண்டு காலையில் எழுந்து, குளித்து, பூஜை முடித்து, தன் வேலையை பார்த்துக் கொண்டு தேமென்று இருப்பார். சாயங்கால வேலைகளை பளிச்சென்று நெற்றியில் விபூதி பட்டையாக இட்டுக் கொண்டு அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியில் இருக்கும் சீரியல்களை ஆறு மணிக்கு ஆரம்பித்து படுக்கச் செல்லும் வரை பார்ப்பார். இதற்கு நடுவில் ஏழே கால் மணிக்கு சென்று உணவு அருந்தி விட்டு வந்து விடுவார். இந்த டிவி சீரியல் பார்க்கும் பொழுது தான் அவருடைய கான்சென்ட்ரேஷன் எவ்வளவு என்று சொல்ல முடியாது. யார் வந்தாலும் தெரியாது, யார் போனாலும் தெரியாது. அணுகுண்டு விழுந்தால் கூட தெரியாது என்று சொல்லலாம்.
மதிய வேளைகளில் வரும் சமையல்கார மாமியிடம், 'என்ன மாமி இப்படி இந்த சுந்தரியைப் போய்க் கொண்டிருக்கிறது, அந்த பொண்ணு இன்னும் எவ்வளவு தான் கஷ்டப்படும்' என்று மிகவும் வருத்தப்பட்டு கொள்வார். அந்த மாமியும், 'ஆமாம் மாமா. நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இந்த சுந்தரிக்கு மாத்தி மாத்தி கஷ்டமா, எல்லாரும் எப்படி இப்படி இருக்கான்னு தான் நானும் யோசிக்கிறேன், நாமெல்லாம் பார்க்கிறோமே, என்று இந்த டிவி சீரியல்கள் இப்படி கொண்டு போவது ரொம்ப மோசம். நெகட்டிவ் எனர்ஜி என்று என் பையன் திட்டுகிறான்' என்றவாறே சமைக்க செல்வாள். இன்று சாயங்காலம் என்ன ஆகுமோ என்று தெரியவில்லை என்று அப்பா கவலையாக சொன்னவுடன், 'நானும் அதான் வெயிட் பண்றேன்' இது மாமி.
இப்படி வெகு சாதாரணமாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அப்பா, திடீரென்று சரிந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டார். போன வாரம் சனிக்கிழமை சீரியல் பார்த்தவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அதற்கு பிறகு பேச்சும் சரியாக இல்லை, கண்ணை திறக்கவும் இல்லை. டாக்டரிடம் அழைத்து போய் பார்த்ததில் அவர், 'வயது தான் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அனுப்பி விட்டார். இந்த நிலையில் நம் சகோதரர்களிடம் சொல்வது தான் சரி என்று அண்ணாவிற்கு ஃபோன் பண்ணினேன். டெல்லியில் இருந்து எடுத்த அண்ணன், 'அடுத்த பிளைட்டில் கிளம்பி வந்துடுறேன்' என்று சொன்னார். 'எப்படியாவது அப்பா இருக்கணும்னு வேண்டிக்கோடா, அடுத்த பிளைட்ல கிளம்பி வந்துடுறேன்' என்ற அக்கா அமெரிக்காவிலிருந்து வரவேண்டும். இவன் டெல்லியில் இருந்ததால் 3 மணி நேரத்தில் வந்துவிடுவான். அவள் பாவம், ஒரு நாள் முழுவதும் பயணித்து வரவேண்டும். 'அப்பா' என்று கூப்பிட்டால் லேசாக கண்ணை திறந்து பார்க்கிறார். அதற்கு பிறகு ஒன்றும் இல்லை.
எல்லா வேலையும் போட்டுவிட்டு வீட்டில் சுத்திச் சுத்தி வந்து கொண்டிருந்தேன். சாயங்காலம் 6 மணிக்கு டிவியின் அலறல் இல்லாமல் அமைதி நிலவியது. பிடிக்கவே இல்லை. அப்பாவை கோபித்துக் கொண்டாலும், செல்லமாகத் திட்டினாலும் அவர் பாட்டுக்கு தான் உண்டு, தன் சீரியல் உண்டு என்று இருந்தார். சின்னதாக வைத்திருப்போம் காதில் விழுந்தால் விழட்டும். காதில் வாங்கிக் கொண்டு அவருடைய வழக்கமான சந்தோஷத்தை அனுபவிக்கட்டும் என்று சீரியல் ஆன் செய்து, மெல்லியதாக வால்யூம் வைத்துவிட்டு நான் உள்ளே சென்றேன்.
அப்பாவிற்கு மூச்சு வாங்கியது, லேசாக கண்ணை திறந்து பார்த்தார். அந்த இடத்தில் யாரோ ஒருவன் கையில் நோட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டு, பக்கத்தில் ஒருவன் கையில் பாசக் கயிற்றை வைத்துக்கொண்டு எருமை மாட்டின் மேல் இருப்பது போல் ஒரு புகைமூட்டமாக தோன்றியது. 'இது என்ன, நாம் பார்த்த சீரியலில் இந்த சீன் வரவில்லையே' என்று யோசித்தார். பிறகு தெரிந்து கொண்டார், 'அடடா, இது சித்திரகுப்தன் இல்ல. நம்மளுக்கு கிளம்புற டைம் வந்துடுத்து போல இருக்கு' என்று யோசித்தார்.
'சித்திரகுப்தன் சார், குட் மார்னிங்!' அதற்கு சித்திரகுப்தன் 'இல்ல சார், இப்ப உங்களுக்கு bad ஈவினிங்' என்றார்.
'அய்யய்யோ, சாயங்காலம் ஆகிவிட்டதா? இன்னும் நான் சீரியல் ஒன்றுமே பார்க்கவில்லையே. சித்திரகுப்தா, டிவி ஆன் செய்து இருக்கிறானா என் பையன்?' சித்திரகுப்தன், 'ஆமாம் சார், டிவியில் ஏதோ சுந்தரி என்கிற பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு குட்டி பொண்ணு வயசுக்கு மீறிய பேச்சை பேசிக்கொண்டு கார்த்திக் என்கிற ஆளோடு பெட் மேல் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறது. ஒன்றும் புரியவில்லை சார்' என்றார்.
அப்பா எமதர்மராஜன் பக்கம் திரும்பி, 'சார், இந்த சுந்தரி சீரியல் முடிந்து அவள் ஒரு வகையில செட்டில் ஆகாமல் நான் கிளம்பினா, அப்புறம் என்னோட ஆத்மா சாந்தி அடையாது. நான் எல்லா பூஜை புனஸ்கரம் பண்ணி இருக்கேன். நேர்மையா இருக்கேன். நீங்க என்னை கொண்டு போய் சொர்க்கத்துல தான் பகவான் கிட்ட காலடியில் தான் விடப்போறேன். ஆனா இந்த பொண்ணு இப்படி தவிக்கிறது, அப்படியே விட்டுட்டுப் போனேன்னா எனக்கு ஜென்மம் சாபல்யம் ஆகுமா?'
சித்திரகுப்தன், 'சார், எங்களுக்கு நிறைய தலைக்கு மேல வேலை இருக்கு. நாங்க போகனும் சார், நீங்க கிளம்புங்க' என்றார் கொஞ்சம் கோபமாக. 'அவசரப்படாதீங்க சார். நீங்க உட்காருங்க சார்,' இது அப்பா. எமதர்மராஜனை பார்த்து அப்பா சொன்னார், 'சார், நீங்களும் அந்த சேர்ல உக்காருங்க சார். பாருங்க இந்த சீரியல் பாருங்க, இதுல அந்த பொண்ணு என்ன கஷ்டப்படுறது. பகவான் ஒருத்தர் இருந்தாருன்னா இந்த பெண்களை எல்லாம் ஏன் சார் இப்படி கஷ்டப்படவிடறார். சார், இன்னைக்கு சனிக்கிழமை, அதான் சார், இன்னிக்கு இந்த எபிசோடை பாத்துட்டு, திங்கட்கிழமை என்ன வருதுன்னு பாத்துட்டு நான் உங்க கூட கண்டிப்பா வந்துடறேன்.'
'இவர் தொல்லை தாங்க முடியல, சித்திரகுப்தா கிளம்பு, நம்ம திங்கட்கிழமை வந்துக்கலாம்,' என்றவாறே இருவரும் கிளம்பிப் போனார்கள். அப்பா ஆயாசமாக ஒரு பெருமூச்சு விட்டு படுத்து கொண்டார். 'அப்பாடி, இன்னைக்கு தப்பிச்சது, திங்கட்கிழமை அன்றைக்கு அவங்க வந்தாங்கன்னா நாம் கிளம்ப வேண்டியது தான். அதுக்குள்ள இந்த சுந்தரிக்கு ஒரு நல்ல நியூஸ் ஏதாவது வரக்கூடாதா?' என்று யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்தார். கண்ணை மூடியவர் லேசாக நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்.
ஆயிற்று. திங்கட்கிழமை சாயங்காலம் வந்தது. சீரியல் நடந்து கொண்டிருந்தது. அப்பா கண்ணை மூடிக்கொண்டு வசனங்களை கேட்டுக்கொண்டிருந்தார். எமதூதனும், சித்திரகுப்தனும் வந்தார்கள். மௌனமாக சேரில் அமர்ந்து .......சுந்தரி சுந்தரி.........(டைட்டில் சாங்). ஹம்ம்ம்ம்ம்ம். அப்பா மட்டும் இல்ல, மற்ற முதியோர்களும் காப்பற்றப்பட்டுவிட்டார்கள்.
Nice imagination
ReplyDeleteசுந்தரி சீரியல்க்கு நல்ல ப்ரோமோ.
ReplyDeleteஇதை டைரக்டர் பார்த்தா I நம் 5 வருஷத்திற்கு இழுத்து விடுவான்