நாலு பேர்
நாலு பேர்
வெகு நாட்களாக ஒரு கேள்வி ! எவ்வளவு நாட்களாக என்று கேட்கிறீர்களா? சிறு வயதிலிருந்தே ! இந்த நாலு பேர் யார்? எப்ப பாத்தாலும் நாலு பேர் என்ன சொல்லுவா, நாலு பேர் பாத்தா என்ன ஆகும், நாலு பேர் எப்படியெல்லாம் பேசுவா ? இன்னிக்கு நான் பார்க்க ஆசைப்படறேன் அந்த நாலு பேர் யாரு? சின்ன வயதில் போட்ட விதை ஒரு தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்க, தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்க இல்லை நம் மனதில் பட்டதை சொல்லவும் தயக்கம், பயம், குழப்பம், கோழைத்தனம், திரைமறைவுக்கு பின்னால் ஒரு நடத்தை, முன்னே ஒரு நடத்தை.... இன்னும் என்ன என்னவோ சொல்லிக்கொண்டு போகலாம்.எங்கோ கண்ணுக்கு தெரியாத நாலு பேருக்கு பயப்படும் மனிதர்கள், தனிமையில் கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். ஏன் இந்த நாலு பேர் நம் வாழ்வை சிதைக்க அனுமதிக்க வேண்டும்.திரைமறைவிற்கு பின்னல்...hypocracy ! நல்ல பெரிய பொசிஷனில் வேலை பார்ப்பவர்கள், சமுதாயத்தின் மேல் மட்டத்தில் மிக மதிக்கப்பட்டவர்கள் , பக்திமான்கள், நல்ல குடும்பத்தை சேர்ந்த நல்லவர் என்று மதிக்கப்படுகிறவர்கள், பதிவிரதையாக நடை உடை பாவனைகள் கொண்ட பெண்கள், நான் குறிப்பிட்டிருக்கும் இந்த உதாரணங்களில் பெரும்பாலோர் நிச்சயமான இரண்டு முகங்கள் வைத்திருக்கின்றனர். இவர்கள் கோழைகள் என்பதா இல்லை நடிகர்கள் என்பதா? பக்தியுடன் தினப்படி பூஜை புனஸ்காரம் செய்து அதில் கிடைத்த தனது பிம்பத்தை இழந்து விடாமல் இருக்க தன சுய நிலையை சுய வாழ்க்கையை கூட மறந்து விடுபவர்கள், பொது வாழ்வில் கிடைத்த பெயரில் மூழ்கி திளைத்து அது தொலைந்த பின்னும் தன்னை தெரியாத வெகுவான பலர்...இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதை,இந்த நாலு பேரை எப்படி சமாளிப்பது, இவர்கள் விலங்கில் இருந்து எப்படி வெளியே வருவது என்று யோசித்ததால்தான் என் வாழ்க்கை இப்படி ஓடிக்கொண்டு இருக்கிறது என்று தோன்றுகிறது.நான் என் கடைசி நாட்களில் எப்படி நம் வாழ்வு சென்றது என்று நினைக்கும் போது நினைத்த மாதிரி வாழ்ந்தது நிஜம் என்றும் அது என்னை மட்டுமே பாதித்தது என்பதிலும் சந்தோஷம்தான். கணவரின் மறைவு என்னையும் என் மகன்களையும் தவிர யாரையும் அதே அளவு பாதிக்காது என்பது நிதர்சனமான உண்மை. எப்படி சந்தோஷம் என்னுடையதோ அதே போல் துக்கமும்தான். இதே போலத்தான் ஒவொருவருடைய வாழ்க்கையும் அவரவர் choices, இந்த நாலு பேரை காட்டி தவறான முடிவுகள், கண்மூடித்தனமான நம்பிக்கைகள் தன்னில் வளர்த்துக்கொண்டுவிட்டு அடுத்தவரை குறை கூறுவதில் என்ன பயன்?அதே சமயத்தில் நாலு பேருக்கு நன்றியும் சொல்வோம், பெற்றோர்கள், குரு , ஆண்டவன், குடிக்கும் நீரும், அடிக்கும் காற்றும் பறக்கும் பறவையும் இன்னும் பல பல ஜீவராசிகள், இவைகள் அடங்கிய இயற்கை. இந்த நாலு பேருக்கு நாம் மனதார நன்றி சொல்லுவோம். இவர்கள்தான் அந்த நாலு பேர் என்று நான் மனதார நம்புகிறேன். பெற்றோர்கள், குரு, ஆண்டவன் இயற்கை இதுதான் அந்த நால்வர். குருபூர்ணிமா அன்று என் குருவிற்கு நமஸ்கரங்கள்.
Comments
Post a Comment
leave your feedback please