உறவும் பிரிவும் !!!!!

உறவும் பிரிவும்

பகல் வருவதால்தான் இரவு முடிகிறது. விளக்கு வைத்தால் இருள் விலகுகிறது... ஹ்ம்ம்ம், உறவுகள் இருப்பதால்தான் பிரிவுகள் வருகின்றன... பிரிவில்தான் உறவின் அருமை தெரியும் போல.

2005ல் பள்ளி போக வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் அடிக்கடி தோன்றியது. (2006ல் Talentia என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஒரு அவதாரம்).

என்னிடம் வேலை செய்த பிரிசில்லாவுடன் பள்ளி சென்றேன். வகுப்பு ஆசிரியைகளில் ஒருவரான பிலோமினா மிஸ் மரணம் பற்றிக் கேட்டவுடன், ரோஜா நிற சீருடை அணிந்த ஜெயந்தியின் மனம் நொந்தது. கண்டிப்பாக அவர் சவப்பெட்டியில்கூட அதே போல் தலையில் காதோரத்தில் ஒற்றை ரோஜாவுடன் அழகாகப் பின் செய்த புடவையுடன், சிக்கென்ற ரவிக்கை, மேட்சாகப் போட்டுக்கொண்டு அழகாக இருந்திருப்பார் என்று ஒரு கணம் தோன்றியது.

ஆசிரியரை நேசிக்காத மாணவர்கள் கிடையாது. அது ஒருவிதமான காதல், பக்தி. முதல்காதல் பள்ளியில் அநேகம் பேர்களுக்கு அவர்கள் ஆசிரியருடன்தான் - ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி.

மிஸ் ஆக்னஸ் குள்ளமான, கல்யாணம் செய்துகொள்ளாத ஆனால் கன்னியாஸ்திரி ஆகாத 'கருப்பு' ஆசிரியர். கண்களில் ஒரு ஒளி. அழகான குறுகுறு சிரிப்பு. என்னுடைய இன்றைய ஆங்கில வல்லமைக்குப் பின் உள்ள பெரிய சக்தி. இவரும் காற்றில் கலந்துவிட்டார். பிரிசில்லா நேரமாகிறது என்று வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

கன்னியாஸ்திரி மடம் உள்ள கட்டிட முகப்பு மாறியிருந்தது. அந்தக் கட்டிட வாசலில் உள்ள பரந்து விரிந்த அரசமர நிழலில் உட்கார்ந்தேன். சிந்தனைகள் பின்னோக்கிக் கட்டவிழ்ந்து ஓடியது.

ஒரே பிளாஷ் பேக். இதே பள்ளி வளாகத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்... சிஸ்டர் ரோஸெலி பால், சிஸ்டர் பவுலின்... ஹ்ம்ம்ம்... மயிலாப்பூர், புனித ரபேல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்தான் நான் பதினொன்றாம் வகுப்பு முடித்தேன். அப்போது மதர் சுப்பீரியர் சிஸ்டர் ரோசலி பால். மென்மையான புன்சிரிப்பு, அதிராமல் ஒரு நளினமான நடை, அதிர்ந்து பேசிக் கேட்டதே கிடையாது.

அந்தக் காலத்தில் கன்னியாஸ்திரிகள் தூய்மையான வெள்ளை நிற அங்கி அணிவார்கள். அதில் வலப்புறம் பாக்கெட் வைத்துத் தைத்திருப்பார்கள். அதில் சங்கிலியுடன் கூடிய கடிகாரம் அணிந்திருப்பார்கள். கழுத்தில் கருப்பு ஜெபமாலையில் ஜீசஸ் டாலர் அணிந்திருப்பார்கள். லேசான ஹை ஹீல் ஷூ. பள்ளி வராண்டாவில் அவர்கள் நடக்கும்போது, அமைதியான பள்ளி நேரங்களில் அந்த ஷூவின் ஒசை, மழை பெய்த பின் தூறல் தகரத்தில் விழுவது போல் டொக் டொக் என்று ஒரு தாளக்கட்டுடன், ரிதத்துடன் இருக்கும்.

அந்த இளம்வயதில் மனதில் பதிந்தது - அந்த உடை, சேவை மனப்பான்மை, எல்லாரிடமும் கனிவாகப் பேசும் மனப்பாங்கு, பொறுமையான குணம் (இது எதுவும் என்னிடம் கிடையாது, கருணையைத் தவிர)! ம்ம்ம்ம்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பா புரியவைத்தார் - கன்னியாஸ்திரி ஆகாமலே அவர்களைப் போல் உதவி புரியலாம், தொண்டு செய்யலாம் என்று.

தலைமை ஆசிரியை ரோசலி பால்! நான் வகுப்பில் இருந்ததை விட அவர் அறை வாசலில் இருந்ததுதான் அதிகம். எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் ஆஜர். Fancy fete, inter school competition, science exhibition - ஒன்று மாற்றி ஒன்று, எல்லாவற்றிலும் நான் ஒரு அங்கம்.

இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், எனக்கென்று ஒரு பொறுப்பான பதவியும் கிடையாது. மூன்றில் நான்கு பங்கு வேலையை சிஸ்டர் சொல்லுவார், நான்கில் ஒரு பங்கு ஆசிரியர்கள் சொல்வார்கள், மேலும் ஒரு முழுப் பங்கு நானே செய்வேன். பெஞ்சு, நாற்காலி போடுவதில் இருந்து, விழா முடிந்து எல்லோரும் போகும் வரை வண்டு போல் ஓடிக்கொண்டே இருப்பேன். என்னுடன் சில சமயங்களில் Y. ரேணுகா, எப்போதும் M.S. பூரணி! (முகநூலில் தேடியும் பூரணி கிடைக்கவில்லை... ஹ்ம்ம்).

சிஸ்டர் பவுலின் கணித ஆசிரியர். இவர்தான் எனக்கு ஒன்பது, பத்து, பதினொன்றாம் வகுப்புகளில் கணிதம் எடுத்தார். கணக்குக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் என்று கணக்கிட எந்தப் பார்முலாவினாலும் முடியாது. ஆனாலும் நான் பதினொன்றாம் வகுப்பில் 74% வாங்கியதற்கு, கண்டிப்பு மிக்க ஆனால் கனிவான அக்கறை கொண்ட சிஸ்டர் பவுலினின் கவனிப்புதான் காரணம்.

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே பள்ளியின் கன்னியாஸ்திரி மடத்தின் வாசலில் நான் காத்திருக்கிறேன் சிஸ்டரைப் பார்க்க! மனதில் சின்ன உணர்வு, ஆயிரம் கேள்விகள். சிஸ்டர் என்னை மறந்துபோயிருப்பாரா? ஹ்ம்ம்.

உள்ளிருந்து வந்த சிஸ்டர் புடவைக்கு மாற்றியிருந்தார். "ஏய், ஜெயந்தி சங்கரா?" என்றார்.

கண்களில் கண்ணீர். இது என்ன நிலை? சிலர் முன்பு ரமணாஷ்ரமத்தில் உணர்வது. இதுதான் ஓஷோ சொல்லும் சத்தோரி நிலையா?

என்னைக் கட்டி அணைத்து உச்சி மோந்தார்! நெஞ்சின் நெகிழ்ச்சி இருவரின் கண்களிலும் முத்துக்களாக உதிர்ந்தது. என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். நான் சொல்லச் சொல்ல அவர், "ஏசுவே, இதென்ன இந்தப் பிள்ளைக்குச் சோதனை" என்று வேதனைப்பட்டார்.

நானும் சிஸ்டரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டோம். அப்போதைய தொழில் HR consulting. சிஸ்டர் சில பெண்களுக்கு வேலை வாங்கித் தரும்படி கேட்டார். என்னால் அது இயலவில்லை என்பதில் எனக்கு ஏகப்பட்ட வருத்தம்.

மூன்று, நான்கு மாதங்களாக நான் பிஸியாக இருந்தேன். சிஸ்டரிடம் இருந்தும் போன் வரவில்லை. நான் முயன்றபோதும் "சுவிட்ச் ஆஃப்" என்ற செய்தி. மனதை ஏதோ பிராண்டியது. பட்டப் பகலில் ஆஃபிஸில் இருந்து பள்ளிக்கு ஓடினேன். மனப் பிராண்டல் உண்மையானது.

சிஸ்டர் புற்றுநோயில் மூன்றே மாதத்தில் ஏசுவிடம் சென்றுவிட்டார். அடக்க முடியாமல் அழுதேன். என்னைப் பார்ப்பதற்கென்றே அவர் தஞ்சாவூர் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்று இங்கு திரும்பியது போல் தோன்றியது.

கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவரைச் சந்தித்த தருணங்கள் மனதில் நிழலாடியது. அமைதியான மனதை வெற்றிடமாக்கியது இந்தப் பிரிவு.


Comments

Popular posts from this blog

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

எண்ணச்சங்கிலியா? எண்ணவிலங்கா

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.