சிறு கதை -1
முதல் கதை
அகப்பட்டவள் நானல்லவோ !
இப்போதுதான் போல் இருந்தது - கணவர் மறைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது. மகன்கள் இருவரும் மாற்றி மாற்றி "நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று துளைத்து எடுத்தார்கள்.
பெரியவன் சொன்னான், "அம்மா, நீ அமெரிக்கா வருவதுதான் சிறந்த தீர்வு. பிரான்ஸ் முடியாது உன்னால், ஏனென்றால் மொழி புரியாது."
சின்னவனும் அதை ஆமோதித்தான். "சரி, அமெரிக்கா போவது மட்டும் எளிதில்லையே. ஆறு மாதத்தில் திரும்பி வர வேண்டும். பயணம் ரொம்ப சலிப்பு" - இது நான்.
"F1 விசா சிறந்த யோசனை" - இது பெரியவன். "பேசாமல் நீ அங்கே வந்து படி அம்மா, ஒரு அட்மிஷன் வாங்கிக்கொண்டு."
ரொம்ப எளிமையாகச் சொல்லிவிட்டேன், ஆனால் நீ GRE மற்றும் TOEFL தேர்வுகளில் தேற வேண்டுமே...'
என்னுள் ஒரு இனம் புரியாத பரபரப்பான உணர்வு. கல்லூரி, நண்பர்கள் மற்றும் வேடிக்கை - அதுவும் அமெரிக்காவில்! ஏன் செய்யக்கூடாது?
உடனே மகனிடம், "சரி டா, நான் முயற்சி செய்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் வருகிறேன்" என்று கெத்தாகச் சொல்லிவிட்டேன்.
இரண்டு மூன்று நாட்கள் ஒரே இணையத்தில் தேடல். பக்கத்தில் இருக்கும் GRE மற்றும் TOEFL பயிற்சி வகுப்புகளைக் கண்டுபிடிக்க... யுரேகா! கண்டுபிடித்துவிட்டேன்.
மகன்கள் இருவரும் கிளம்பித் தத்தம் நாடுகளுக்குப் போய்விட்டார்கள். மனதில் "அம்மா வந்துவிடுவாள் என்னுடன் இருக்க" என்று பெரியவனும், "அம்மா ஜாக்கிரதையாக அமெரிக்காவில் இருப்பாள்" என்று சின்னவனும் நிம்மதியாகப் போய்விட்டார்கள்.
நிம்மதி போனது எனக்குதான்! இது ஒரு சவாலாக! அவனுக்கென்ன, கிளப்பிவிட்டான்! அகப்பட்டவள் நானல்லவோ.
மறுநாள் காலையில், விறுவிறுவென்று கிளம்பி வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் GRE மற்றும் TOEFL பயிற்சி நிறுவனத்திற்குப் போனேன். மிக ஸ்டைலாக வெள்ளை ஷார்ட் குர்த்தி, ப்ளூ ஜீன்ஸ் அணிந்த நான் உள்ளே நுழைந்தேன்.
அழகாக இல்லை - மிக அழகான (இருபத்தொரு வயது இருக்கலாம்) ஒரு பெண், அவளுடன் சுமாரான ஆனால் நல்ல நீண்ட உயரமான வாலிபன் (பெண்களுக்கே உயரம் ஒரு கவர்ச்சி போல்). இருவரும் நான் உள்ளே வந்ததையே கவனிக்காமல் ரிலீஸான சமீபத்திய சினிமா பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் மெதுவாக "எக்ஸ்க்யூஸ் மீ" என்றேன். உடனே அந்த இளைஞன் சற்று திரும்பி, "யெஸ் ஆண்ட்டி" என்றான். எனக்குள் இருந்த ஏதோ இளமை அடிபட்டது.
சரளமான ஆங்கிலத்தில் "Good morning! I am not your aunty" என்றேன். சற்றே திகைத்து இருபத்தொன்றை கடைக்கண்ணால் பார்த்தான். அது ஒரு விஷமமான முறுவலுடன், "யெஸ் மேடம், வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என்றது.
உள்ளுக்குள் வாடிக்கையாளர் சேவை பற்றி ஒரு உரை நிகழ்த்த வேண்டும் போல் வந்த அந்த எண்ணத்தை நிறுத்தி, அடுத்த தாக்குதலுக்குப் போகுமுன், அந்தப் பெண் அவசரமாக "உங்கள் பிள்ளைக்குச் சேர்க்க வேண்டுமா?" என்றாள்.
என் இளமை... இல்லை, இளமையின்மை நினைவுக்கு வந்தது. ஏற்கனவே குமுறிக்கொண்டிருந்த அகந்தை பளிச்சென்று வெளியில் வந்தது. பெருமையாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு "இல்லை! எனக்கு!"
க்ஷணநேரத்தில் அங்கு ஒரு பார்வை பரிமாற்றம் நடந்தது. ஹ்ம்ம்ம். அந்தப் பையன் உடுப்பி ஹோட்டல் server போல அடுக்க ஆரம்பித்தான். "GRE, TOEFL, SAT, CAT, MAT..." ஒரு நிமிடம் போல் அவன் முடிக்கக் காத்திருந்து "GRE மட்டும்தான்" என்றேன்.
இந்தக் கால இளைய தலைமுறைக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என்பது எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதுதான் நினைப்பு!
உடனே அந்தப் பெண் "பேட்ச்ஸ்" அது இது என்று ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்த நான், நன்றி சொல்லிவிட்டுப் படியிறங்கினேன். பின்னால் அவர்கள் சிரிக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.
சற்றே நகர்ந்த நான் நின்றேன். அங்கு இருவர் பேசிக்கொண்டிருந்தனர். ஒட்டுக் கேட்காமலே காதில் விழுந்தது - "students", "next batch", "GRE" என்ற வார்த்தைகள்.
நான் அவர்கள் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு மேலும், "எனக்கு இயற்கணிதம் சுத்தமாக வராது சார். அதற்கு மட்டும் தனிப்பட்ட பயிற்சி யாராவது கிடைப்பார்களா? மீதி எல்லாம் நானே படித்துவிடுவேன்" என்று கேட்க, அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ஒரு கணித பேராசிரியர்.
அவர் "கண்டிப்பாகச் செய்யலாம் மா. வாரத்தில் மூன்று நாட்கள் இங்கு வருகிறேன். உங்கள் முகவரி கொடுங்கள், நான் வந்து வகுப்பு நடத்துகிறேன்" என்றார்.
மகிழ்ச்சி கிளம்பிவிட்டது. முகவரி, மொபைல் எண் எல்லாம் பரிமாற்றம் செய்துகொண்டு வீட்டிற்கு வந்து உற்சாகமாக, இராஜாவின் "மடை திறந்து" பாட்டை ஹம் செய்தவாறு அன்றைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
GRE புத்தகத்தைத் திறந்து ஆங்கிலப் பயிற்சிகளை மேலோட்டமாகப் பார்த்தேன். ஏனென்றால் நாளைதான் நல்ல நாள். கணித ஆசிரியரும் வருவார். நோட்புக், பென்சில், பேனா எல்லாம் தயார் செய்து வைத்தேன்.
அன்று இரவு அமெரிக்காவில் இருந்து பேசிய மகனிடம் அன்றைய வெற்றியைப் பகிர்ந்துகொண்டேன். இரவின் தனிமையில் இசையுடன் இணைந்து கனவுகள் கண்டேன். அமெரிக்கா, படிப்பு, இளமையான சூழல், கூப்பிடும் தூரத்தில் மகன். ஹ்ம்ம்ம், வேறென்ன வேண்டும்?
காலையில் நேரத்திற்கே தயாராக கணித ஆசிரியருக்காகக் காத்திருந்தேன். வந்தார். கிட்டத்தட்ட நாற்பது கணக்குகள் போட்டோம். எல்லாம் சரியான விடைகள். ஆசிரியருக்கு ஆச்சர்யம்.
நான் மெதுவாக, "அடிப்படை கணிதம் வரும் சார். இயற்கணிதம்தான்..." என்று தயக்கத்துடன் இழுத்தேன். அவர் உடனே, "டோன்ட் ஒர்ரி மேடம், செய்யலாம்" என்றார்.
அகப்பட்டவள் நானல்லவோ! அவர் ஆரம்பித்து நேர்கோட்டு சமன்பாடு சொல்லிக்கொடுக்க, x என்று ஆரம்பித்தவுடன் (உள்ளே பள்ளி சீருடை அணிந்த ஜெயந்தியின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது) மிகச் சின்சியராகக் கவனமாகக் கற்றுக்கொண்டு, அவர் கொடுத்த பத்துக் கணக்குகளையும் சரியாகப் போட்டேன்.
அவரும் வகுப்பு முடிந்தது என்று சொல்லிவிட்டு இருபது கணக்குகள் வீட்டுப் பணியாகக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
Home work - ஒரு கணக்குகூடச் சரியாக வரவில்லை. வகுப்பில் புரிவது, அவர் சென்றவுடன் அவருடனே சென்றுவிடும் போல்!
இவ்வாறாக ஒரு மாதம் ஓடிவிட்டது. GRE தேர்வு தேதியும் நெருங்கிவிட்டது, ஆனால் x மட்டும் புரியவில்லை.
கடைசி நாள் கணித வகுப்பு. ஆசிரியர் சொன்னார், "மேடம், நீங்கள் நன்றாகத்தான் செய்கிறீர்கள். இன்னும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் மேடம். பெரிய விஷயமே இல்லை."
நான் ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னேன், "சார், இந்த X கடவுள் மாதிரி. கடவுளையும் எல்லா விதமாகவும் பதிலீடு செய்யலாம், விடை வராது. விடை கிடைத்துவிடுமென்றால் சுய உணர்வுதான்? அது மாதிரிதான் X-ம்."
ஆசிரியர் நான் பார்த்த மாதிரியே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்துவிட்டு, "ஐம்பத்தைந்து வயதில் இயற்கணிதம் படித்தால் அப்படித்தான் தோன்றும் மேடம். குட் லக், நன்றாகச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
எவ்வளவோ முயன்றும் X இன்னும் கைகூடவில்லை. இன்று ஐம்பத்தொன்பது வயதை எட்டிவிட்டேன். இன்னும் X... அதாவது கடவுள் புரியவில்லை!
I got a good score in GRE and TOEFL and went and finished my Master's at the University of Washington Seattle with a total Scholarship,.
ஆனால் இன்னும் கடவுள் புரியவில்லை.
Comments
Post a Comment
leave your feedback please