பழைய நினைவுகள் புதிய பதிவில்!
இன்றைய காலையின் இனிய எண்ணங்கள் தினமும் உற்சாகத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்? உண்மையாக வாழ்வை நேசிக்க வேண்டும். இதைச் சொல்லாமல் சொல்லி வலியுறுத்துவதுதான் இயற்கையின் நோக்கம் போல! வாயிற்படியில் இறங்கி வாசலில் கால் வைக்கும்போது, சில்லென்ற பனித்துளி நிரம்பிய தென்றல் முகத்தை வருடும்போது, குளிர் குளிர் என்று எண்ணாமல் அனுபவிக்கும்போது தன்னால் மனதில் நேசம் பொங்குகிறது. விரைவாக நடந்து ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது, அந்தக் கணமே வாழ்வின் மிக முக்கியமான கணம் போலத் தோன்றுகிறது. இந்த ரயிலில் பயணிக்கும்போது படைத்தவனையும், அவனது உயரிய படைப்பான நம்மையும் எண்ணி எண்ணி வியப்பேன் தினமும். எத்தனை வித்தியாசமான முகங்கள், உடல் அமைப்புகள், விந்தையான நடைமுறைகள், தனித்துவமான முகபாவங்கள்! கோபமாக சிலர், நம்மை அளவிடுவது போல் சிலர், பெரும்பான்மையான பலர் சின்ன சிரிப்புடன் ஒரு அன்பாக! உற்சாகத்துடன் ஒரு மகிழ்ச்சியான குரலில் "ஹாய்" என்போர் சிலர். ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம். இந்த ரயில் பயணம் எட்டு நிமிடங்கள்தான். ஆனால் ஒரு உன்னதமான அனுபவம். ரயிலில் வந்து இறங்கி, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும்போத...